“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

 

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல இன்று காலை இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்கில் பதக்கம் (வெண்கலம்) வென்றது. இந்த இரு செய்திகளாலும் இந்தியர்கள் இன்ப வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

இச்சூழலில் தற்போது மேலும் ஸ்வீட் செய்தியை மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா கொடுத்துள்ளார். இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவினாலும் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். 57 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த காலிறுதி போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா பல்கேரிய வீரர் ஜார்ஜி வாலண்டினோவ் வாங்கேலோவை துவம்சம் செய்தார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜார்ஜியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Ravi Dahiya to fight for gold at Poland Open after 3 consecutive wins -  Sportstar

அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் காலடி எடுத்து வைத்தார். ரஷ்ய வீரர் ஜாவுருடன் இன்று மோதினார். தொடக்கத்திலிருந்தே ரஷ்ய வீரர் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 7-4 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வீழ்ந்தார் ரவிக்குமார். இருப்பினும் இறுதிச்சுற்று வரை சென்றதால் ரவிக்குமாருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்கள் கிடைத்துள்ளன. சுஷில் குமாருக்கு அடுத்தப்படியாக வெள்ளி வென்ற இரண்டாம் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

மகளிர் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனத்திற்கு தனியொருவனாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். வெள்ளி வென்ற ரவிக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “ரவிக்குமார் தஹியா இந்தியாவின் மிகச்சிறந்த குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரர். அவரது போராட்டக் குணமும் மனஉறுதியும் மிகச் சிறப்பானவை. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.