ராஜீவ்தியாகி மாரடைப்பால் மரணம்! ‘’எனக்கு தனிப்பட்ட இழப்பு’’என பிரியங்கா உருக்கம்!

 

ராஜீவ்தியாகி மாரடைப்பால் மரணம்! ‘’எனக்கு தனிப்பட்ட இழப்பு’’என பிரியங்கா உருக்கம்!

காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டபோது உடனே அவர் காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்று காங்கிரசுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்டி வந்த ராஜீவ் தியாகியின் மறைவுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தீவிர காங்கிரசாரும், உண்மையான தேசபக்தருமான ராஜீவ் தியாகியின் திடீர் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் துக்கத்தில் பங்கேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராஜீவ்தியாகி மாரடைப்பால் மரணம்! ‘’எனக்கு தனிப்பட்ட இழப்பு’’என பிரியங்கா உருக்கம்!

’’ராஜீவ் தியாகியின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. இது எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு’’ என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா. மேலும், ராஜீவ் தியாகி கருத்தியல் ரீதியாக இயங்கும் நபர் என்றும் தெரிவித்துள்ள பிரியங்கா, தியாகியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

‘’என் அன்பான நண்பர் ராஜீவ் தியாகியின் திடீர் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராஜீவ் தியாகியின் மறைவு மூலம், நான் ஒரு குடும்ப உறுப்பினரை, ஒரு நண்பரை, ஒரு நல்ல மனிதனை இழந்துவிட்டேன்’’என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வர் ஷெர்கில்.

’’எங்கள் சகாவின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார் எம்.பி. கே.சி.வேணுகோபால்.

பாஜக பிரமுகர் சம்பிட் பத்ராவுடன் இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றுள்ளார் தியாகி. இந்நிலையில் இரவு மரணம் என்று செய்தி வந்ததை அடுத்து, ‘’அவர் எங்களுடன் இல்லை என்று என்னால் நம்ப முடியவில்லை. இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு விவாதித்தோம். இப்போது அவர் இல்லை என்று நினைக்கிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.