ரஜினி வீட்டின் முன்பு அவரது ரசிகர் தீக்குளிக்க முயற்சி

 

ரஜினி வீட்டின் முன்பு அவரது ரசிகர் தீக்குளிக்க முயற்சி

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறி வந்தார். 90’ஸில் வெளியான படங்களிலும் கூட பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைத்து வந்த ரஜினி, நிச்சயம் அரசியலுக்கு வந்து விடுவார் என பேசப்பட்டது. அதன் படியே, கடந்த நவம்பர் மாதம் தான் ஜனவரியில் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இதனிடையே, ரஜினிக்கு பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவர் கட்சி தொடங்கியதாகவும் புதிய கட்சி தொடங்கினாலும் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான், தான் கட்சி தொடங்கவில்லை என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார். உடல்நிலை காரணமாக எடுக்கப்பட்ட இந்த முடிவை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

ரஜினி வீட்டின் முன்பு அவரது ரசிகர் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு, அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி முருகேசன் (55) என்பவர் தீக்குளிக்க முயற்சித்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து முருகேசன் பற்றிய விவரத்தை சேகரித்துவருகின்றனர். ரஜினியின் கட்சி தொடங்காததால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது.

முன்னதாக ரஜினியின் கட்சி தொடங்காததால் அவரது தீவிர ரசிகர் ராஜ்குமார்(வயது34) தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி அதிரவைக்கிறது. விழுப்புரம் மாவட்டம் பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ராஜ்குமார், ரஜினியின் வெறித்தனமான ரசிகர். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று ஆவலாக எதிர்பார்த்து இருந்தவர், அவர் வரவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டதும், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து உயிரிழந்தார்.