ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை அழுத்திய போலீசார்

 

ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை அழுத்திய போலீசார்

ஜோத்பூர்: ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் போன்று ராஜஸ்தானில் ஒரு நபரின் கழுத்தை போலீசார் அழுத்தினர். இது பேசுபொருள் ஆகியுள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பின நபரின் கொலை குறித்து உலகம் முழுக்க கறுப்பின மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னுடைய காரை நிறுத்திய பின்பும், அவரைப் பிடித்த ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தினார். இதனால் ஃப்ளாய்ட் மூச்சுத் திணறி கடந்த மே 25-ஆம் தேதி இறந்தார்.

இதனால் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்தியது போலவே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலும் முகக் கவசம் அணியாத நபரின் கழுத்தில் காலை வைத்து போலீசார் அழுத்திய சம்பவம் நடந்துள்ளது. முகேஷ்குமார் பிரஜாபத் என்பவர் முகக் கவசம் அணியாமல் வந்து, போலீசார் எச்சரித்தும் அவர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அடாவடியாக செயல்பட்ட முகேஷ்குமாரை அடக்குவதற்காக ராஜஸ்தான் போலீசார் அவரது கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட முகேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.