ராஜஸ்தான் காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி சண்டை… முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி சண்டை… முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் சச்சின் பைலட்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2018ல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 100க்கும் அதிகமான இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. மேலும் கடந்த ஆண்டு பி.எஸ்.பி. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் மொத்தமாக காங்கிரசில் இணைந்தனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 107ஆக உயர்ந்தது. இதுதவிர சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பலரும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்தனர். அதேசமயம் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க.வுக்கு மொத்தம் 72 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.

ராஜஸ்தான் காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி சண்டை… முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் சச்சின் பைலட்
காங்கிரஸ்

இதனால் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. கவிழ்க்க நினைத்தாலும் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பதுதான் நிசர்சனம். கடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட். காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர் அசோக் கெலாட்டை முதல்வராக நியமனம் செய்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது. அதுமுதல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் தொடங்கியது.

ராஜஸ்தான் காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி சண்டை… முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் சச்சின் பைலட்
முதல்வர் அசோக் கெலாட்

முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்க தொடங்கியது. மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என அசோக் கெலாட் அடிக்கடி கூறிவந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் இதுவரை பா.ஜ.க.வை நேரடியாக குற்றச்சாட்டியது இல்லை. அதேசமயம் அண்மையில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் எதிர்பார்த்தப்படி காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இது குறித்து சச்சின் பைலட் கூறுகையில், எனது கட்சியினர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் (காங்கிரஸ் எம்.எல்.ஏ.களை பா.ஜ.க. இழுக்க முயற்சி) அனைத்தும் பொய் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிருபணம் செய்து விட்டது என தெரிவித்தார்.

ராஜஸ்தான் காங்கிரசில் வெடிக்கும் உட்கட்சி சண்டை… முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் சச்சின் பைலட்
பா.ஜ.க.

சச்சின் பைலட்டின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி சண்டை நடப்பதை வெளிப்படையாக காட்டியது. இந்த நிலையில் சச்சின் பைலட் திடீரென டெல்லி சென்றுள்ளார். அங்கு கட்சி தலைமை சந்தித்து ராஜஸ்தான் அரசியல் நிலவரம் தொடர்பாக பேச இருப்பதாகவும், இதற்காக நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல். மேலும் அவருடன் அவரது ஆதரவாளர்களான காங்கிரஸை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்களும் டெல்லியில் முகாம் இட்டுள்ளனர். சச்சின் பைலட் இன்று ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.