தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது

 

தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது

இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை, அயோத்தியில் தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணிகளை தொடங்கியது.

2019 நவம்பரில், ராம் ஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டி கொள்ளலாம், அதேசமயம் அயோத்தியில் வேறு இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை மத்திய மற்றும் உத்தர பிரதேச அரசும் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியது.

தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது
மரக்கன்று நட்ட அறக்கட்டளையினர்

இதனையடுத்து அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டுவதற்காக, இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை சன்னி வக்பு வாரியம் உருவாக்கியது. அந்த இடத்தில் மசூதி, மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், சமூக சமையலறை, இந்தோ இஸ்லாமிய கலாச்சார ஆராய்ச்சி மையம் மற்றும் பதிப்பக இல்லம் ஆகியவற்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 26ம் தேதியன்று மசூதி கட்டுவதற்கான பணிகளை முறைப்படி தொடங்க அறக்கட்டளை முடிவு செய்து இருந்தது.அதன்படி, தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் நேற்று காலை 8.15 மணி அளவில் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உறுப்பினர்கள் கூடினர்.

தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது
மசூதி (மாதிரிப்படம்)

பின் காலை 8.45 மணிக்கு அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அஹ்மத் பாரூகி அங்கு தேசியக் கொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து மசூதி கட்டுமான பணிகள் முறைப்படி தொடங்குவதை குறிக்கும் வகையில், அறக்கட்டளையின் 12 உறுப்பினர்களும் தலா ஒரு மரக்கன்றை நட்டனர். மசூதி கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது தொடர்பாக ஜாபா அஹ்மத் பாரூகி கூறுகையில், அந்த இடத்தில் மண் பரிசோதனை பணிகளை நாங்கள் தொடங்கினோம். எனவே மசூதிக்கான தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று ஒருவர் கூறலாம். மண் பரிசோதனை அறிக்கைகள் வெளிவந்து எங்கள் வரைபடங்கள் அங்கீகரிக்கப்பட்டால் நாங்கள் கட்டுமான பணிகளை தொடங்குவோம். மசூதிக்கான நன்கொடைகளுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மக்கள் ஏற்கனவே பங்களிக்க தொடங்கி விட்டனர் என்று தெரிவித்தார்.