தருமபுரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்… ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்!

 

தருமபுரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்… ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கழிவுநீர் கால்வாய்களை தூய்மை செய்யும் முகாமை நேற்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

இதன்படி, மாவட்டத்திற்கு உட்பட்ட 10 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 251 கிராம ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் தருமபுரி நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, தருமபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சி மற்றும் தருமபுரி நகராட்சி மதிகோண்பாளையம் ஆகிய இடங்களில், ஆட்சியர் திவ்யதர்ஷினி கால்வாய் தூய்மை செய்யும் பணியை துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூல்நிலையும் உள்ளது. மேலும், மழைநீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்… ஆட்சியர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்!

எனவே, பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க ஏதுவாக இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை 6 நாட்கள் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் ஆக அறிவித்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் நடைபெறுகிறது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இரா.வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சீனிவாச சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.