Home அரசியல் சூடு பிடிக்கும் தேர்தல் களம் – தொண்டர்களை தயார்படுத்தும் கட்சிகள் !

சூடு பிடிக்கும் தேர்தல் களம் – தொண்டர்களை தயார்படுத்தும் கட்சிகள் !

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசியல் கட்சிகள் களப்பணிக்கு தயாராகும் வகையில் உள்கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றன.
அணிகளை பலப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் நிர்வாகிகள் மாற்றம், நியமனம் என அதிமுக, திமுக கட்சிகள் விறுவிறுவென வேலைகளை தொடங்கி விட்டன.

TN bye-polls: Caste and cash to play role as AIADMK, DMK scrutinise  candidates | The News Minute


திமுகவினர், கட்சி மேல்மட்ட அளவில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவி இடங்களை நிரப்புவது தொடங்கி, கீழ்மட்ட கிளை பொறுப்பாளர்கள் வரை நியமிக்க விறு விறு வேலைகளை செய்து வருகின்றனர்.
அதிமுக இன்னும் ஒருபடி மேலே போய் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்து கட்சி அணிகளுக்கு மறைமுகமாக உற்சாகத்தை அளித்து வேலைகளை தொடங்கிவிட்டது

பக்கா பிளான் பண்ணும் பாஜக
இன்னொரு பக்கம், வரும் ஆண்டிலாவது பாஜகவுக்கு தமிழகத்தில் அடித்தளம் அமைக்க வேண்டும் என மாநில தலைவர் முருகன் காய் நகர்த்தி வருகிறார். திமுக போன்ற வலுவான கட்சியில் இருந்து, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ வையே இழுத்து வரும் அளவுக்கு அந்த கட்சி வேலை செய்து வருகிறது.
இதற்கிடையே, குற்றப்பின்னணி கொண்டவர்கள் உள்பட பலரையும் பல கணக்குகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை செய்து வருகிறது. அதற்கு பலம் சேர்க்கும் வகையில் முன்னால் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போன்றவர்களையும் பாஜக களம் இறங்கி உள்ளது.


காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கம்போல கூட்டணி பேச்சுவார்த்தை நேரத்தில் மட்டும் முன்னுக்கு வருவார்கள் என்பது தமிழக அரசியல் களம் நன்கு அறியும் என்பதால், இப்போதைக்கு அந்த கட்சிகளில் எந்த சலசலப்பையும் பார்க்க முடியவில்லை.

தேமுதிக கூட்டணி கணக்கு
தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த், தேர்தல் தொடர்பான கூட்டணி கணக்குகளுக்கு இப்போதே அடிபோட ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக பேசியதுடன், கட்சித் தலைவர் விஜயகாந்த் விரைவில் தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகவும் உற்சாகமூட்டியுள்ளார்.


பாமக, விசிக கட்சிகள் நிலை ?
கட்சியினருக்கு உற்சாகமூட்டும் அஸ்திரங்களை வீசவில்லை என்றாலும், பாமக, விசிக கட்சிகள் அணிகளிடத்தில், செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதுடன், இந்த தொற்று காலத்திலும், அறிக்கைகள், வீடியோக்கள் மூலம் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன.

கமலுக்கு பிக்பாஸ் தேர்தல் மேடை?
யார் வாக்காளர் என்கிற தெளிவான இலக்கை அடையாத மக்கள் நீதி மய்யமும், ரஜினி மக்கள் மன்றமும் இப்போதுவரை எந்த ’மூவ்’வும் செய்யவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4ஐ முடித்து விட்டு தேர்தலையொட்டி, இந்தியன் 2 படம் மூலம் மெகா பிராசரத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.


ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக பிக்பாஸ் தள்ளிப் போன நிலையில், தற்போது அதற்கான புரமோஷன்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, பிக்பாஸ் மேடையை கமல் பிரசார களமாக மாற்ற வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களிடமும் இளைஞர்களிடமும் உரையாடுவதற்கு வாய்ப்புள்ளது.
கொரானா காலத்தில் மற்ற அரசியல் தலைவர்களுக்கு இல்லாத வாய்ப்பு கமலுக்கு கிடைத்திருக்கிறது என்றும், அதையே அரசியல் அஸ்திரமாக பயன்படுத்த உள்ளதாகவும் தெரியவருகிறது.

ரஜினிக்கு அரசியல் சுனாமி வீசுமா ?
அரசியல் சுனாமி வீசினால் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்த ரஜினி, தற்போது எந்த விதமான மூவ்மெண்டும் இல்லாமல் இருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் விறுப்பாக வேலையை தொடங்கியுள்ள நிலையில், கட்சி தொடங்குவாரா மாட்டாரா ? என்கிற குழப்பம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.


கட்சி தொடங்க ஆசை இருந்தலும், தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதல் அவர் தயக்கம் காட்டி வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.
இப்போதே மாதங்களை, நாட்களாக எண்ணி, அரசியல் கட்சிகள் வேலைகளை தொடங்கிவிட்டன. கொரோனா பயம் தாண்டி, களப்பணி ஆற்றக் காத்திருக்கிறார்கள் தொண்டர்கள்.

-தமிழ்தீபன்

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews