தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “சசிகலா விடுதலையான பின்பு அவரை மீண்டும் அஇஅதிமுக கட்சியில் இணைத்துக் கொள்வது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோற்ற நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் அண்ணன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயித்தது போல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் அஇஅதிமுக நல்ல வெற்றி பெறும். ஆர். கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று சென்ற டிடிவி தினகரன் அதன்பின் அவர் தொகுதி பக்கமே வரவில்லை என்பதால் அமமுக பற்றி எங்களுக்கு கவலை இல்லை, அமமுகவுடன் இனணயாமல் அஇஅதிமுக தனித்து நின்றே போட்டியிடும். போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையிலுள்ள ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா இம்மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வருகிறார். அவர் வெளியே வந்ததும், தமிழ்நாடு அரசியல் நிலவரங்களில் பல மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.