கோவையில் கொரோனா பாதித்த தெருவை மூடியதை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

 

கோவையில் கொரோனா பாதித்த தெருவை மூடியதை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை

கோவையில் கொரோனா பாதித்த தெருவை மாநகராட்சி அதிகாரிகள் அடைத்ததை கண்டித்து பொதுமக்கள் திடீரென ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தீவிரமடைந்து உள்ளது. தினசரி பாதிப்பு 1500-ஐ கடந்துள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில், கோவை குப்புசாமி மருத்துவமனை அருகேயுள்ள பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் நபருக்கு, சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவையில் கொரோனா பாதித்த தெருவை மூடியதை கண்டித்து, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் அந்த வீட்டிற்கு செல்லும் சாலையை தடுப்புகளை கொண்டு அடைத்தது. இதனால் பாதிக்கப்பட்ட நபரின் அருகாமையில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வாகனங்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை தடுப்புகளை அகற்றக் கோரி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு வீட்டில் பாதிப்பு ஏற்பட்டதால் 50 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்கள், தாங்கள் பாதுகாப்புடன் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.