தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு? நிதியமைச்சர் விளக்கம்

 

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு? நிதியமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு கொண்டுவரப்படாது என நிதியமைச்சர் ப ழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு? நிதியமைச்சர் விளக்கம்

அண்டை மாநிலமான கேரளாவில் சர்வ சாதாரணமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் தமிழகத்தில், கருணாநிதி ஆட்சியிலேயே லாட்டரி சீட்டு வியாபாரம் நுழைந்தது. நாளடைவில் தனியார் லாட்டரி ஏஜெண்டுகளின் கவரிச்சி அறிவிப்பால் சூதாட்டமாக மாறியது. ஆசை வார்த்தைகளை நம்பி பல அப்பாவி குடும்பங்கள் லாட்டரி சீட்டால் சீரழிந்தன. ஏராளமானோர் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தமிழகத்தில் ஆட்சியமைத்த ஜெயலலிதா, லாட்டரி சீட்டை ஒழித்தார்.

இதனிடையே மீண்டும் லாட்டரிச் சீட்டு முறையை திமுக அரசு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “அதிமுக அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரி செய்ய லாட்டரி பற்றி சிந்திக்கவே இல்லை. லாட்டரி பற்றிய கற்பனையை எடப்பாடி பழனிசாமி தனக்குத்தானே உருவாக்கிக்கொண்டுள்ளார். கட்டுக்கதைகளை கூறி முதலமைச்சரின் நற்பணிகளுக்கும், சிறப்பான நிர்வாகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி களங்கம் விளைவிக்க வேண்டாம்” எனக் கூறினார்.