மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.. 10,12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுங்க.. பிரியங்கா காந்தி

 

மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.. 10,12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுங்க.. பிரியங்கா காந்தி

10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும், கொரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களை கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்இ வாரியத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.. 10,12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுங்க.. பிரியங்கா காந்தி
ரமேஷ் பொக்ரியால்

இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் 2-வது அலையில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைத்தால், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி, தேர்வு மையம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறினால், மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும் பொறுப்பேற்க வேண்டும். நாள்தோறும் நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதை நினைத்து லட்சக்கணக்கான மாணவர்களின் பெற்றோர் கவலையும் அச்சமும் தெரிவிக்கிறார்கள்.

மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.. 10,12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுங்க.. பிரியங்கா காந்தி
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் (கோப்புப்படம்)

கொரோனா வைரஸ் பரவலின் உச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது தாங்கள் தொற்றால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தால், பதற்றத்தால் முழுத்திறமையும் வெளிப்படுத்தி தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படலாம். ஆதலால் தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு தேர்வுகளைரத்து செய்ய உரிமையுடன் கேட்கிறார்கள். பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோருடன் மத்திய அரசு பேசி கல்விக் கடமைகளை நிறைவேற்றும் வழிகள் குறித்து ஆலோசிக்கும் என நம்புகிறேன். மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுதச் செய்வது ஆபத்தான சூழலுக்குத் தள்ளும். இளம் வயதினரை பாதுகாப்பதும், வழிநடத்துவதம் அரசியல்வாதிகள் பொறுப்பாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.