`உங்க 103 கிராம் தங்க நகையை விற்றுவிட்டோம்!’- அடகு வைத்தவரை பதறவைத்த தனியார் நிதி நிறுவனம்

 

`உங்க 103 கிராம் தங்க நகையை விற்றுவிட்டோம்!’- அடகு வைத்தவரை பதறவைத்த தனியார் நிதி நிறுவனம்

அடகு வைத்த 103 கிராம் தங்க நகைகளை விற்பனை செய்த காரைக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மீது காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஓனாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் புனேவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் காரைக்குடி அண்ணாநகரில் உள்ள எம்எஸ்கே என்ற நிதி நிறுவனத்தில் 103 கிராம் தங்க நகைகளை ரூ.3.50 லட்சத்துக்கு அடகு வைத்துள்ளார். இதன் பின்னர் அவர் புனே சென்றுவிட்டார். கொரோனாவால் அவர் ஊர் திரும்ப தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊர் திரும்பிய வெங்கட்ராமன் அடகு வைத்த நகையை மீட்க சென்றுள்ளார். அப்போது, நிதி நிறுவன உரிமையாளர் மேகநாதன் நகையை விற்றுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைகளை மீட்க இங்கு வந்தேன். தற்போது தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நிதி நிறுவனம் எனது நகைகளை திரும்ப தரவில்லை. என்னிடம் எதுவும் கேட்காமல் நகைகளை விற்பனை செய்துவிட்டதாக கூறுகின்றனர். வீட்டில் என்னுடைய தயார் இருந்தபோது கொரியர் ஒன்று வந்துள்ளது. இதை பிரித்து பார்த்தபோது அடமானம் வைத்த தங்க நகைகளை போட்டோ எடுத்து அனுப்பிவைத்திருந்தனர். புனேவில் இருந்து வந்த பிறகுதான் இது எனக்கு தெரியவந்தது. இந்த மோசடி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் எனது நகைகளை மீட்டு தருவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடகு வைத்த நகைகளை தனியார் நிதி நிறுவனம் விற்பனை செய்த சம்பவம் காரைக்குடி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.