கோவை
கோவையில் அதிகாலையில் தனியார் பேருந்தும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ்(64). இவர் நேற்று தனது மனைவி ராஜாமணி(60) மற்றும் பேரக் குழந்தைகளுடன் பழனிக் கோயிலுக்கு சென்றுவிட்டு ஆம்னி வேனில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார். வேனை கோவையை சேர்ந்த முகமது ஆசிக்(38) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை ஈச்சனாரி சந்திப்பு அருகே சென்றபோது, நாகூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தின் மீது, எதிர்பாராத விதமாக வேன் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஓட்டுநர் ஆசிக் மற்றும் ராஜாமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், நடராஜ் மற்றும் 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.