அதிமுக தொண்டர்களே திமுக பக்கம் வாருங்க… அதிமுக முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம்

 

அதிமுக தொண்டர்களே திமுக பக்கம் வாருங்க… அதிமுக முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம்

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.R.சுந்தரம் அவர்களுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.R.N ராஜேஷ்குமார் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பி.ஆர் சுந்தரம் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்த பிறகு இன்று ராசிபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தார். இதை தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் K.R.N ராஜேஸ்குமார் முன்னிலையில் திமுக நகர செயலாளர் என். ஆர். சங்கர் தலைமையில் பொன்னாடை போத்தி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர கழக வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் ஒன்றிய நிர்வாகிகள், வார்டு பிரதிநிதிகள், பேரூர் கழக செயலாளர்கள் உட்பட 300-க்கு மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய பிஆர் சுந்தரம்,”நான் இந்தக் கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. நாமக்கல் மாவட்ட அண்ணா திமுக கட்சி அலுவலகத்தில் தற்போது கூட்டம் நடைபெற்று வருகிறது. எதற்கு என்றால் PR சுந்தரம் துரோகம் செய்து விட்டு போய்விட்டார். அண்ணா திமுகவிலிருந்து போய்விட்டார். எனவே யாருமே அவரிடம் பேசக்கூடாது என தங்கமணி தலைமையில் தற்போது கூட்டம் நடைபெற்று வருகிறது. நான் யாரையும் வர சொல்லவில்லை. இன்று வந்ததும் யாருக்கும் தெரியாது. உங்க மாவட்ட கழக செயலாளருக்கு மட்டுமே தெரியும். நான் எடுத்த முடிவு எவ்வளவு சரியான முடிவு என்பதை இந்தக் கூட்டம் நிரூபித்துக் காட்டுகிறது. நான் அண்ணா திமுக கட்சி தொண்டர்களையோ, அண்ணா திமுக பேரூர் கழக நகர கழக ஒன்றிய கழகத்தினர் யாரையும் நான் அழைக்கவில்லை. நான் அழைக்க போவதும் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழக தளபதியின் செய்கை பிடித்திருக்கிறது, திட்டம் பிடித்திருக்கிறது. அதற்காக திமுகவில் இணைந்தேன். யாரையும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். பிரிய பட்டவர்கள் என்னிடம் வாருங்கள். தளபதியின் திட்டங்களை யார் ஏற்றுக் கொள்கிறீர்களோ அவர்கள் வாருங்கள்.

தங்கமணி பயப்படுகிறார். தீர்மானம் போட போகிறார்கள். எதற்கு என்றால் நான் திமுகவில் சேருவதற்கு திட்டமிட்டதாகவும், இது தெரிந்து என்னை நீக்கி இருப்பதாகவும் இதனால் நான் அவசரம் அவசரமாக சென்று திமுகவில் இணைந்தார் என்று கூறியுள்ளார்.

1996ல் இரட்டை இலையை காப்பாற்றியவன் நான். அண்ணா திமுகவில் முக்கியமான நபர். எனக்கு ஏன் திருச்செங்கோட்டில் சீட் தரவில்லை. அதனால் நான் கட்சி மாறவில்லை. பாராளுமன்றத்தில் சீட் தரவில்லை. தமிழ்நாட்டிலேயே 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், உங்கள் முன்னாள் மாவட்ட செயலாளர், மத்திய இணையமைச்சரை தோற்கடித்தவன். அப்படியாபட்ட எனக்கு சீட் கொடுக்கவில்லை. எனக்கு அதிமுக கட்சி துரோகம் இழைத்து விட்டது. மரியாதை கொடுக்கவில்லை. எனது அரசு என பேசுகிறார் எடப்பாடியார்.

1970இல் பச்சிசுடையாம்பாளையம் கிராமம் அன்றைக்கு திமுகவின் கோட்டை. எனது 16 வயதில் கலைஞரை அழைத்து வந்தேன். பூம்புகார், பராசக்தி படத்தில் வரும் கலைஞரின் வசனத்தை பார்க்க ராசிபுரத்தில் உள்ள கிருஷ்ணா தியேட்டருக்கு 10 தடவைக்கு மேல் வந்து பார்த்தேன். அவ்வளவு ஈடுபாடு கொண்டவன். அதிமுக தொண்டர்கள் கழக உடன்பிறப்புகள் என்னுடைய கொள்கை பிடித்திருந்தால் வாருங்கள் இல்லை என்றால் நீங்கள் அங்கே இருந்து பணியாற்றுங்கள். யாரையும் நான் தொல்லை செய்ய மாட்டேன். என்றைக்கும் உங்களுக்காக என் கதவுகள் திறந்திருக்கும்” என பேசினார்