வெல்கம் நட்டாஜி… ராகுல்காந்தியே திரும்பிப் போ..

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவும், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தியும் இன்று ஒரே நாளில் தமிழகம் வருகிறார்கள். இதில், நட்டாவுக்கு வெல்கம் என்றும், திரும்பிப்போ ராகுல் என்றும் சொல்கிறார்கள்.
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன் என்று தெரிவி்த்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல்காந்தி.
ஜல்லிக்கட்டை காண ராகுல்காந்தி தமிழகம் வருவதை முன்னிட்டு, #RahulinThamizhVanakkam #ராகுலின்_தமிழ்வணக்கம் என்ற ஹேஷ்டேக்குகளை காங்கிரசார் டிரெண்டாக்கி வருகிறார்கள். ஆனால், ஜல்லிக்கட்டை காண வரும் ராகுல்காந்திக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இந்த எதிர்ப்பினை #Goback_Rahul #GobackRahulGandhi என்ற ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் டிரெண்டாக்குவதன் மூலம் காட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வரப்பட்டது என்பதால்தான் ராகுல்காந்திக்கு இந்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், 11.7.2011ல் மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிவிப்பில், சிங்கம், புலி, கரடி, குரங்கு, கருஞ்சிறுத்தைகள் பட்டியலையும் காளைகளையும் சேர்க்கபட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டது.
காளைகளை காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்துவிட்டதால், அதன்படி நடந்த வழக்குகளினாலும், தீர்ப்புகளினாலும் 2015ல் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. ஜலிக்கட்டுக்கு தடை வாங்கிய அமைப்பின் தலைவருக்கும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பின்னர் பல்வேறு போராட்டங்களினாலும், பாஜக அரசுக்கு வைத்த கோரிக்கைகளினாலும் 2016ல் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நீக்கினார். ஜெய்ராம் ரமேஷின் ஆணையை பிரகாஷ் ஜவடேகர் நீக்கியதால்தான், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்க ஏதுவானது.
அன்று ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிவிட்டு, தடை வாங்கியவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு, இன்று ஜல்லிக்கட்டு போட்டியை காண வரலமா? என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஜல்லிகட்டுக்கு பாஜக அவசர சட்டம் கொண்டு வந்ததால் பாஜகவின் தலைவருக்கு #WelcomeNaddaJi என்றும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் காங்கிரஸ் ராகுல்காந்திக்கு #GobackRahulGandhi என்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

