பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

 

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

கோவை

பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியில் கொட்டப்பட்டிருந்த வாகன கழிவுகளில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் பழைய வாகனங்களை உடைத்து விற்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே பழைய வாகனங்களில் இருந்து அகற்றப்படும் ரெக்சின் ஷீட்டுகள், பிளைவுட்கள், கண்ணாடி உள்ளிட்ட கழிவுபொருட்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வாகன கழிவுகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

சிறிது நேரத்தில் மளமளனெ மற்ற பகுதிகளுக்கும் பரவிய தீயானது, குப்பையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கழிவுகளின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி உள்ளிட்ட வாகனங்களில் தீப்பற்றாத வகையில் அவற்றை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் தனியார் பள்ளி பேருந்து எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.