மத்திய அமைச்சர் மாலையிட்ட அம்பேத்கர் சிலையை கங்கை நீரால் சுத்தம் செய்த சி.பி.ஐ. மற்றும் ஆர்.ஜே.டி. தொண்டர்கள்..

 

மத்திய அமைச்சர் மாலையிட்ட அம்பேத்கர் சிலையை கங்கை நீரால் சுத்தம் செய்த சி.பி.ஐ. மற்றும் ஆர்.ஜே.டி. தொண்டர்கள்..

பீகாரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மாலையிட்ட அம்பேத்கர் சிலையை, சி.பி.ஐ. மற்றும் ஆர்.ஜே.டி. கட்சி தொண்டர்கள் கங்கை நீரால் சுத்தம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகார் மாநிலம் பெகுசாரையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பல்லியாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கிரிராஜ் சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிரிராஜ் சிங்

இந்நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சனோஜ் சரோஜ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் விகாஷ் பஸ்வான் ஆகியோர் தங்களது கட்சி தொண்டர்களுடன் கிரிராஜ் சிங் மாலை அணிவித்த அம்பேத்கர் சிலை உள்ள பல்லியா பூங்காவுக்கு வந்தனர். பின் அவர்கள் கொண்டு வந்து இருந்த கங்கை நீரால் அம்பேத்கர் சிலையை சுத்தம் செய்தனர். அப்போது ஜெய் பீம் என முழக்கமிட்டனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இது வைரலாகி வருகிறது.

அம்பேத்கர் சிலையை சுத்தப்படுத்தும் தொண்டர்கள்

சி.பி.ஐ. மற்றும் ஆர்.ஜே.டி. கட்சி தொண்டர்கள் இது குறித்து கூறுகையில், கிரிராஜ் சிங் மேல்சாதி ஆதரவாளர் மற்றும் அம்பேத்கர் எதிர்த்து போராடிய அனைத்துக்கும் அவர் ஆதரவானவர். கிரிராஜ் சிங்கால் அம்பேத்கர் சிலை தீட்டுப்படுத்தப்பட்டது மற்றும் புனித நீரால் சுத்தகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் ராஜ் கிஷோர் சிங் கூறுகையில், பிரிவினைக்கு முந்தைய நேரத்தை நினைவூட்டும் ஒரு சூழ்நிலையை உருவாக்க சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முயற்சி செய்கின்றனர். அம்பேத்கர் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் ஒரு சிறந்தவராக இருப்பதால், அவர் மீது யாருக்கும் ஏகபோக உரிமை கிடையாது. இது போன்ற சம்பவங்களை பொறுத்து கொள்ள முடியாது என தெரிவித்தார்.