பழைய திட்டங்களை எல்லாம் புதிய நிவாரணமாக அறிவிக்கும் நிதி அமைச்சரே! – மதுரை எம்.பி வெங்கடேசன் வேதனை

 

பழைய திட்டங்களை எல்லாம் புதிய நிவாரணமாக அறிவிக்கும் நிதி அமைச்சரே! – மதுரை எம்.பி வெங்கடேசன் வேதனை

நிதியமைச்சர் இதற்கு ஒரே நாளில் பேசியிருக்கலாம். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம். 20 லட்சம் கோடி என்றவுடன் எல்லோரும் ஏதோ இந்த அரசு மனம் இரங்கி விட்டது என்று நினைத்தார்கள். செலவு என்றால் வருமானம் வேண்டாமா? ஏற்கெனவே பற்றாக்குறை பாட்டோடு பட்ஜெட் போட்ட இந்த அரசாங்கம் எங்கே இருந்து 20 லட்சம் கோடியை கொண்டு வருவார்கள் என்ற ஆச்சர்யம் எல்லோருக்கும்…

கடந்த ஆண்டு அறிவித்த திட்டங்களை எல்லாம் புதிய திட்டம் போல நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருவதாக மதுரை எம்.பி வெங்கடேசன் வேதனை தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் இதற்கு ஒரே நாளில் பேசியிருக்கலாம். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம். 20 லட்சம் கோடி என்றவுடன் எல்லோரும் ஏதோ இந்த அரசு மனம் இறங்கி விட்டது என்று நினைத்தார்கள். செலவு என்றால் வருமானம் வேண்டாமா? ஏற்கெனவே பற்றாக்குறை பாட்டோடு பட்ஜெட் போட்ட இந்த அரசாங்கம் எங்கே இருந்து 20 லட்சம் கோடியை கொண்டு வருவார்கள் என்ற ஆச்சர்யம் எல்லோருக்கும்… கார்ப்பரேட் வரியா? செல்வ வரியா? சூப்பர் ரிச் வரியா? ஒன்றுமே இல்லை கடைசியில்… ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று வெறும் கையால் முழம் போடுவது கஷ்டம் இல்லையா! அதுதான் 3 நாட்கள் ஆகியிருக்கிறது.

nirmala-sitha

“விவசாயிகள் ஸ்பெஷல்” என்று இன்று ஆரம்பித்த நிதியமைச்சர் விவசாயிகள் கைகளில் நேரில் சேருகிற வகையில் என்ன கொடுத்துள்ளார்? எல்லாம் கடன்… இல்லாவிட்டால் வழக்கமாக செய்கிற விவகாரங்கள்… பழைய அறிவிப்புகள்… இவற்றுக்கு புது அட்டை போட்டு கோவிட் நிவாரணம் என்று அறிவித்துள்ளார். உதாரணமாக கால் நடை நோய் தடுப்பு ஊசிகளுக்காக இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ஜூன் 2019 லிலேயே ரூ 13313 கோடிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்ததுதான்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி குறைந்த பட்ச ஆதார விலை (MSP) கொடுத்தால் நேரடியாக விவசாயிகளின் கைகளுக்கு செல்லும். விவசாயிகளின் கடனை ரத்து செய்தால் அவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து நிற்பார்கள். இதுதானே எதிர்பார்த்தது… இதை விட்டு விட்டு நாங்கள் விவசாயிகளுக்கு “அதிகாரம் அளிக்கிறோம்”… “சலுகைகள்” அல்ல… என்கிறார். ஒரு ஆளும் கட்சி காரர் விளக்கம் கொடுக்கிறார். அதாவது மீன் கொடுப்பதற்கு பதிலாக பிரதமர் மோடி மீன் பிடிக்க தூண்டில் கொடுக்கிறாராம். ரொம்ப காலம், ரொம்ப தடவை கேட்டு கேட்டு புளிச்சி போன கதை. அய்யா, ஏழை மக்கள் எல்லாம் குளத்தின் மீது மேல் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. தண்ணீர் இழுவைக்குள் தத்தளித்து கொண்டிருக்கிறார். கை கொடுத்து தூக்குங்கள் முதலில்… கையும் கொடுக்கவில்லை… தூண்டிலும் கொடுக்கவில்லை… மீனும் கொடுக்கவில்லை….” என்று கூறியுள்ளார்.