செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க: மாஸ் காட்டும் டிடிவி தினகரன்

 

செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க: மாஸ் காட்டும் டிடிவி தினகரன்

 செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராகவும் டிடிவி தினகரனின் வலதுகரமாகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல்  12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, முக ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன் என கூறினார்.

இந்நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  செந்தில் பாலாஜியை தேர்தல் களத்துக்கு அறிமுகம் செய்தவன் நான். 2006-ம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரை நான் சேர்த்தே. ஜெ மறைவிற்கு பிறகு என்னுடன் இணைந்து செயலாற்றினார். 4 மாதங்களுக்கு முன்பு என்னிடம் வந்து எனக்கு சொந்த வேலை இருக்கிறது அதை முடித்துவிட்டு வருகிறேன் என்றார். சரி என்று நானும் இருந்தேன்.

ஆனால் இப்போது ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன் என கூறுகிறார். பரவாயில்லை அவர் எங்கிருந்தாலும் வாழ்க. யாரையும் பிடித்து வைக்க முடியாது. அவர் சென்றதால் எங்கள் கூடாரம் காலியாகவில்லை. எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் 4000 உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அவர் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். செந்தில் பாலாஜி இணைப்பை விழா போல் நடத்துவதன் மூலம் திமுகவின் பலம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 1.20 கோடி உறுப்பினர்கள் அமமுகவில் உள்ளனர்.

துரோகிகளிடம் கூட செல்லலாம் ஆனால் செந்தில் பாலாஜி விரோதிகளிடம் சென்றுவிட்டார். எங்கள் கட்சி நிர்வாகிகளை இழுத்து பலம் பெறும் நிலையில் திமுக இருக்கிறது. திமுக என்னை பார்த்து பயப்படுகிறது. கரூரில் செந்தில் பாலாஜி உட்பட 89 நிர்வாகிகளே அமமுகவில் இருந்தனர். திமுகவில் இணைய வருமாறு அமமுகவில் பலரை செந்தில் பாலாஜி அழைத்துள்ளார் என்றார்.