கருணாநிதி சிலை திறப்பு: உறுதியானது ராகுல் வருகை: பின்னணி என்ன?

 

கருணாநிதி சிலை திறப்பு: உறுதியானது ராகுல் வருகை: பின்னணி என்ன?

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். 

சென்னை: மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி அங்கு இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, அந்த சிலையை புனரமைக்கும் வேலை நடந்து வந்தது.

karunanidhi

புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதி சிலையும் அண்ணா அறிவாலயத்தில் ஒரே இடத்தில், நாளை திறக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள்  கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது. இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முன்னதாக ராகுல் காந்தி  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பதால் அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறார். அதனால் அவரது நிகழ்ச்சி திடீரென திட்டமிடப்பட வாய்ப்பில்லை. மேலும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு யார் முதல்வர் என்ற நிலைப்பாடு இன்னும் முடிவாகாத நிலையில்  ராகுல் வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ராகுல் காந்தி, சோனியா  ஆகியோர் மாலை 3.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருவதாகத் தகவல் உறுதியாகியுள்ளது.

 

யார் யார் பங்கேற்கிறார்கள்?

sonia

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மற்றும் தேசிய, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல் ஹாசனும் பங்கேற்க உள்ளனர். பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்ட வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

எங்கு நடைபெறுகிறது?

anna arivalayam

அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்  டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது. முன்னதாக  சோனியா காந்தி, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

 

பலத்த பாதுகாப்பு!

police

தேசிய, மாநில தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் வருவதால் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கருணாநிதி சிலை திறக்கப்படும் தேனாம்பேட்டை அறிவாலயம், ராயப்பேட்டையில் பொதுக் கூட்ட வளாகம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவு பிரிவு போலீஸாரும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.