ஓரிரு தினங்களில் திமுகவில் இணைய இருக்கிறேன்… மவுனம் கலைத்த செந்தில் பாலாஜி?

 

ஓரிரு தினங்களில் திமுகவில் இணைய இருக்கிறேன்… மவுனம் கலைத்த செந்தில் பாலாஜி?

ஓரிரு தினங்களில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய இருப்பதாக செந்தில் பாலாஜி பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர்: ஓரிரு தினங்களில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய இருப்பதாக செந்தில் பாலாஜி பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது செல்லபிள்ளையாக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2011-16-ம் ஆண்டு ஜெ ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர். மேலும் கரூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்து வலதுகரமாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே அரவக்குறிச்சியில் போட்டியிட்டு அவர் வெற்றியும் பெற்றார். 

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் செந்தில் பாலாஜி மனு கொடுத்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து தினகரனுடன் இணைந்து மிகவும் தீவிரமாக செயல்பட்டார். ஆனால் தினகரனின் அமமுக கட்சிக்காக அதிகளவு பணத்தை செந்தில்பாலாஜி செலவழித்துவிட்டார் ஆனால் அவருக்கு ஒரு ரூபாய் கூட இன்றுவரை கிடைக்கவில்லை என அவர் மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

sendhil

மேலும்,  தினகரனை நம்பி வந்ததற்கு எம்.எல்.ஏ பதவியையும் பறிகொடுத்தாகிவிட்டது ஆனால் இப்போது திடீரென அதிமுக – அமமுக இணைப்பு பேச்சு எழுந்திருக்கிறது. எனவே அதிமுக – அமமுக இணைப்பு நிச்சயம் நடந்துதான் தீரும் என எண்ணும் செந்தில் பாலாஜி, இனி அதிமுகவில் நாம் சேர்ந்தால், ஓபிஎஸ் தரப்பினரை எப்படி இப்போது அதிமுகவில் நடத்துகிறார்களோ அதே நிலைதான் தமக்கும் வரும் என நினைப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இனி தனது அரசியல் எதிர்காலம் இருக்கவேண்டும் என்றால் திமுகவில் இணைவதுதான் ஒரேவழி என முடிவெடுத்து அவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆ.ராசாவுடன் அவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகி மேலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. 

arasa

செந்தில் பாலாஜியை இணைத்துக்கொள்ள திமுகவும் பெரிதும் விரும்புகிறதாம். ஏனெனில் கொங்கு மண்டலத்தில் வீக்காக இருக்கும் திமுகவின் செல்வாக்கை நிலை நிறுத்துகிறேன், அதற்கான செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குறுதிதான் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இந்நிலையில், நேற்று ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட செந்தில் பாலாஜி, ஒரு வாரத்துக்கு முன்பே மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் ஓரிரு தினங்களில் ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைய இருப்பதாகவும், அதன் பின்னர் மு.க.ஸ்டாலினை கரூருக்கு வரவழைத்து அமமுக-வினரை திமுக-வில் இணைக்கும் பிரம்மாண்ட விழா நடைபெறும் என்றும் செந்தில்பாலாஜி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.