"நீட் வரலாறு தெரியுமா?"... கூட்டத்திலிருந்து சட்டுனு வெளியேறிய வானதி - வெளிநடப்பு செய்தது ஏன்?
2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தின் இரண்டாவது நாளில் நீட் தேர்வு விலக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாகப் பேசினார். அப்போது உரையாற்றிய அவர், "நீட்டுக்கு எதிரான நமது இந்தப் போராட்டத்தையும், நாம் நமது கொள்கையிலிருந்து எள்முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம்.
அந்தக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்து அமைகிறேன்” என்றார். இதன்பின் பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், நீட் விலக்கு கோரும் அரசின் முடிவுக்கு எப்போதும் நாங்கள் துணைநிற்போம் என உறுதியளித்தார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே கூறிவிட்டதால் அனைவரும் ஓரணியில் திரண்டனர்.
ஆனால் பாஜக மட்டும் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நீட்டுக்கு ஆதரவாக பேசுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சொன்னது போலவே இன்று அவர் கலந்துகொண்டார். ஆனால் உடனடியாக கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதால் பாஜக சார்பில் கலந்துகொண்டு எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தேன். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் எங்களுக்கு (பாஜக) உடன்பாடு இல்லை.
மத்திய அரசால் மாநில அரசின் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வு என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்த நீட் தேர்வு வந்த வரலாறு பலமுறை ஆண்டுக்கணக்காக இங்கு விவாதிக்கப்பட்ட ஒன்று. இது ஏதோ பாஜக செயல்திட்டத்தின் கீழ் உருவான தேர்வு இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியில்தான் கொண்டுவரப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் நாடுமுழுவதும் நீட் தேர்வு நடக்கிறது. சமூக நீதிக்கு எதிராக நீட் தேர்வு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுவும் நூறு சதவிகிதம் உண்மைக்குப் புறம்பானது. அதிலும் எங்களுக்கு ஏற்பு இல்லை'' என்றார்.