இது யாருக்கு கிடைத்த வெற்றி?
இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள் உதயநிதி ஸ்டாலினும் திமுகவினரும். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள் அதிமுகவினர். இது அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள் பாஜகவினர். உண்மையில் இது யாருக்கு கிடைத்த வெற்றி?
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு, அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய மூன்று பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். சட்டமன்றத்திலும் இது தொடர்பாக ஒரு டெல்டா காரனாக இந்த திட்டத்தை ஒருபோதும் மதிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதியளிக்காது. எல்லோரையும்விட இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
திமுக எம்பி களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மற்றும் டெல்லியிலும் அமைச்சர்களை சந்தித்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இதேபோன்று அதிமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அண்ணாமலையும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் .
எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் டெல்டாவில் அறிவிக்கப்பட்ட மூன்று நிலக்கரி சுரங்க திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது . இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் மூன்று நிலக்கரி சுரங்கங்களை ஏழாவது தவணை காலத்தில் இருந்து விலக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்னை சந்தித்தார். கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்விலும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அந்த மூன்று பகுதிகளை ஏலத்திலிருந்து விலக்குமாறு நான் உத்தரவிட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
தனது டுவிட்டர் பதிவில் முதல்வர் மு. க. ஸ்டாலினை அவர் டேக் செய்திருக்கிறார். இதனால் தமிழகத்தில் நிலக்கரி சுரங்கத் திட்டம் ரத்து செய்ததற்கு நாங்கள் தான் காரணம் என்று பாஜக ,திமுக அதிமுக 3 கட்சியினருமே சொல்லி வருகின்றனர். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் சொல்லி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினும் திமுகவினரும் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி , ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லி வரும் நிலையில் , அதிமுகவினரும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லி வருகின்றனர்.
அண்ணன் எடப்பாடியார் அவர்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி! முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொண்டு வந்த வேளாண் மண்டலம் திட்டத்தால் நிலக்கரி திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு என்கிறார் அதிமுக ஐடி விங்க் தலைவர் நிர்மல்குமார்.
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்