யார் இந்த கரூர் கம்பெனி? கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? அரசுக்கு பாஜக கேள்வி

 
se

டாஸ்மாக் ஊழியர்களை கரூரில் இருந்து வரும் கும்பல் மிரட்டி பணம் பறிக்கிறது.  அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றாலும்,  மிரட்டுகிறார்கள் என்று புகார் கொடுத்தாலும் கொலை செய்து விடுவோம் என்று எச்சரிக்கிறது.   இந்த கும்பலின் பின்னணியில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது பாஜக. 

 இது குறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி,   'கரூர் கம்பெனியிலிருந்து வருகிறோம்' பணம் கொடு என்று சில ரௌடிகள் டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாகவும், டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர் என்கிறார். 

na

அவர் மேலும் ,  இந்த விவகாரம் குறித்து காவல் துறையினரிடம்  புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாராய விற்பனையில் கடும் மோசடி நடப்பதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். 

இது குறித்து புகார் தெரிவிப்பவர்களை, பணம் கொடுக்க மறுப்பவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது டாஸ்மாக்  நிர்வாகம். கோவையில் அனுமதி வாங்கி போராட்டம் நடத்திய ஊழியர்களை காவல் துறை மேலிடத்தின் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளது.

யார் இந்த கரூர் கம்பெனி? இந்த நிறுவனத்தின் பின்னணியில் யார்?கொலை மிரட்டல் விடும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள் யார்? குடி குடியை கெடுக்கும் என்று சொல்கிறது அரசு. அந்த குடியை கொடுக்கும் அரசு துறை ஊழியர்களின் குடியை கெடுக்கும் தீய சக்திகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் இதன் பின்னணியில் உள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டுகிறார்கள் டாஸ்மாக் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள்.  திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் தொடர்கின்றன.

இளம் விதவைகளை அதிகமாக்கும் மது விற்பனையிலும் ஊழல், முறைகேடுகளை செய்வது தான் திராவிட மாடல் அரசா? கரூர் கம்பெனியை கண்டுபிடித்து ரௌடிகளை கைது செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. இல்லையேல் 'குடி' மக்கள் பார்த்து கொள்வார்கள் என்கிறார்.