எது போலி? எது உண்மை? தொடரும் அதிமுக சர்ச்சை
நான் திமுகவின் பொதுச்செயலாளர் என்று பழனிச்சாமி சொல்லிக்கொண்டிருக்க, நான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் போலி பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார் ஓ .பன்னீர்செல்வம்.
அதிமுகவின் பொதுக்குழு பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதை அடுத்து திருச்சியில் அதிமுக மாநாட்டை கூட்டினார் ஓ .பன்னீர்செல்வம். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பழனிச்சாமி தன்னை அறிவித்துக் கொண்டாலும் பன்னீர்செல்வம் இன்னமும் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்து வருகிறார்.
இந்த குழப்படியான நிலையில் அதிமுகவின் போலி பொதுக்குழுவை கலைப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கழகப் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற புரட்சித்.தலைவர் எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அப்பதவியில் இருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா என்ற விதியை மாற்றியும் அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச்செயலாளராக வர முடியும் என்கிற அடிப்படை விதியை மாற்றி,
பத்து மாவட்ட கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் பத்து மாவட்ட கழகச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் , ஐந்து ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து கலக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டு வந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும்.
கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று 24 .4. 2023 அன்று திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்களின் மாநாடு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர் செல்வத்திற்கு பரிந்துரை செய்தது. அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று கலக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக உறுப்பினர்கள் யாரும் அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ள கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன். புதிய பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்படும் வகையில் உண்மையான கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்பதையும் , அதன் பின்னர் முறையான நேர்மையான தேர்தல்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஓபிஎஸ்சின் இந்த அறிவிப்பால் எது போலி? எது உண்மை? என்று அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.