திமுகவுக்கு வலிக்குதோ இல்லையோ எங்களுக்கு வலிக்குது - செல்லூர்ராஜூ

 
si

தமிழக முதலமைச்சரை அப்படி பொத்தாம் பொதுவாக நிற்க வைத்து அவமரியாதை செய்தது திமுகவுக்கு வலிக்குதோ இல்லையோ எங்களுக்கு வலிக்குது என்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு .

மதுரையில் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.   அப்போது கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது குறித்தும் அப்போது நடந்தது குறித்த கேள்விக்கு,   ‘’காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது அவர்கள் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. 

se

 கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினை பொத்தாம் பொதுவாக நிற்க வைத்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வருக்கு அவமரியாதை நடந்திருக்கிறது.  அது திமுக காரர்களுக்கு வலிக்குதோ இல்லையோ எங்களுக்கு வலிக்குது . தமிழகத்தை எந்த அளவிற்கு கர்நாடகா அரசு புறக்கணிக்கிறது என்பதை நேற்றைய தினத்தில் பார்க்க முடிந்தது . முதலமைச்சருக்கு அப்படிப்பட்ட அவமரியாதை நடந்திருக்கிறது.  இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.

 2000 ரூபாய் நோட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு,   ‘’ 2000 ரூபாய் விவகாரத்தில் கால அவகாசம் கொடுத்து தான் மத்திய அரசு அறிவித்திருக்கிறது . அதனால் எந்தவித பாதிப்பும் இல்லை . மத்திய அரசு இதை செய்வதில் எந்த விதமான சங்கடமும் எங்களுக்கு கிடையாது.  அதனால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதிமுக அதனை வரவேற்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

 திமுகவின் ஊழல் பட்டியல்கள் குறித்த மனுவை ஆளுநரை சந்தித்து  அதிமுக மனு கொடுப்பதாக இருப்பது குறித்த கேள்விக்கு,  ‘’ திமுக எவ்வளவு பெரிய ஊழல் செய்திருக்கிறது என்பதை நிதி அமைச்சர் பிடிஆர் இன் ஆடியோ மூலம் தெரிய வந்திருக்கிறது.   இதனை எடப்பாடியார் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.   அதேபோல் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாகவும் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.   நாளைய தினம் தமிழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.