’’சந்துருவும், பாண்டியனும் வந்தபோது இந்த கூட்டம் என்ன புடுங்கிக்கொண்டு இருந்தது’’

சந்துருவும், பாண்டியனும் வந்தபோது ஆட்சேபிக்காத கும்பல், இன்று கதருவது ஏனோ? என்று கேட்கிறார் எச்.ராஜா.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேர் புதிதாக பதவியேற்றனர். கடந்த 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதில், விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. அதில், வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். சென்னை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமித்தற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இதேபோல் விக்டோரியா கவுரியின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யக் கூடாது என்று சென்னை வழக்கறிஞர்கள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக விக்டோரியா பல்வேறு வெறுப்பு கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள்
. பாஜகவில் அவர் நிர்வாகியாகவும் உள்ளார் . பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய கருத்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புடையதாக மட்டும்தான் இருந்திருக்கிறது. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை அரசியல் பின்புலத்தின் காரணமாக நியமனம் செய்யக்கூடாது என்று சொல்லி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விக்டோரியா கௌரி நீதிபதியாகிவிட்டால் முஸ்லிம் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எந்த ஒரு வழக்கறிஞருக்கும் அவரது நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்ப முடியுமா என்று வழக்கறிஞர்கள் குழு கேட்டிருந்தனர். இஸ்லாம் பச்சை தீவிரவாதம் கிறிஸ்துவம் வெள்ளை தீவிரவாதம் என்று விக்டோரியா கவுரி முன்னர் பேசியிருந்ததையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்டோரியா கௌரி.
விக்டோரியா கவுரி பாஜக பிரமுகர் என்பதால் எதிர்ப்புகள் எழுந்துள்ளதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த சந்துரு நீதிபதி ஆனதை ஆட்சேபிக்காத கும்பல், இன்று கதருவது ஏனோ. சந்துரு அவர்கள் இந்த நாட்டின் நிதி அமைச்சர் அவர்களை ஊறுகா அம்மையார் என்று கூறி ஜாதிய வன்மத்தை கட்டியது உலகறியும் என்கிறார்.
மேலும், திமுகவின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் நியமிக்கப்பட்டது தவறில்லை என்றால் இதில் என்ன தவறு உள்ளது என்று கேட்கிறார்.
எச்.ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ளவர், திமுக மாவட்ட செயலாளர் ஆக இருந்த ரத்தினவேல் பாண்டியன் நீதிபதி ஆனபோது இந்த கூட்டம் என்ன புடுங்கி கொண்டு இருந்தது? என்று கேட்கிறார்.