”நாம் ஃபீனிக்ஸ் பறவை மாதிரி.. இதுதான் நம்ம டார்கெட்..” விஜயகாந்த் எழுதிய கடிதம்.. - உற்சாகத்தில் தொண்டர்கள்...
பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் தோல்வியை சரி செய்து இமாலய வெற்றி பெறுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், அடுத்த ஆண்டே 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் களம் கண்டார். பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட விருதாச்சலம் தொகுதியில் தான் தேமுதி க வெற்றி பெற்றது என்றாலும், யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு 8.4 % வாக்குகளை அக்கட்சி பெற்றிருந்தது.. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 10.9 சதவீத வாக்குகளைக் பெற்று தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
பின்னர் 2011 சட்டமன்ற தெர்தலிக் அக்கட்சியின் வாக்கு வங்கி 7.9 ஆக குறைந்தது.. தேமுதிக முகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருந்த அந்த சமயத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2014 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.. வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. அதன்பிறகு தேமுதிகவின் வாக்கு சதவீதம் குறைந்துகொண்டே வருகிறது. 2016ல் 2.4 % , 2019 நாடாளுமன்ற தேர்தலில் 2.2 என அடிமட்ட நிலைக்கு சென்றது அக்கட்சியின் நிலை.. இத்தனை தொகுதிகள் வேண்டும் என கேட்டுப்பெறும் நிலையில் இருந்த தேமுதிக, கட்சிகள் கொடுக்கும் இங்களில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட பிரேமலதா, டெபாசிட் இழந்தார்.. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்த தேமுதிகவிற்கு கடந்த உள்ளாட்சித் தேர்தல் மேலும் பலத்த அடியைக் கொடுத்தது. தற்போது நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் புதிய உத்வேகத்துடன் களம் காண்கிறது. தொடர் தோல்விளைச் சந்தித்து வரும் தேமுதிகவை, மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஜயகாந்த் தொண்டர்களை பூஸ்ட் அப் செய்திருக்கிறார்..
தேமுதிகவின் கடந்த கால தோல்விகளுக்கு தவறான கூட்டணி முடிவுகளும், தலைமையை சரியாக கவனிக்க முடியாமல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததுமே காரணமாக கூறப்படுகிறது. விஜயகாந்த் கையில் நிர்வாகம் இருந்தபோது, தொண்டர்களிடம் இருந்த உற்காகம் இப்போது இல்லை என்ற பரவலான கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தற்போது உடல்நலம் தேறி பிரச்னைகளை சரிசெய்யும் முனைப்பில் இறங்கியுள்ள விஜயகாந்த், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேமுதிகவினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அடுத்தடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் தான் நமக்கான இலக்கு என்று குறிப்பிட்டிருக்கிறார். பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழுந்து வரும் காலத்தில் தோல்விகளை சரிசெய்து, இமாலய வெற்றி பெறுவோம் என்றும் பெரும் பொருட்செலவு செய்து தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தேமுதிக வெற்றி பெறமுடியும் என நினைக்கும் வார்டுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள விஜயகாந்த், நமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தேமுதிக தொடர்களிடையே மீண்டும் அந்த பழைய உற்சாகத்தை கூட்டியிருக்கிறதாம்..புதிய உத்வேகத்துடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது தேமுதிக.