“தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே விஜய்க்கு வெற்றி”- அடித்து சொன்ன ஜோதிடர்
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என பிரபல ஜோதிடர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரிய காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் ஜோதிட அறக்கட்டளை அமைப்பின் சார்பில் நான்காம் ஆண்டு ஜோதிட மாநாடு மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஜோதிடர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் ஜோதிடத்தின் அடுத்த கட்ட நிலைகள் குறித்தும் ,டிஜிட்டல் மையத்தில் ஜோதிடம் பார்ப்பதும் குறித்தும், ஜோதிடம் குறித்த கல்வி அறிவு, தற்போதுள்ள நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த நிகழ்வில் பேசப்பட்டது.
இதனை அடுத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கோவையை சேர்ந்த பிரபல ஜோதிடர் மந்த்ராசலம், “புதிதாக பிறக்கின்ற 2026 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டிய வருடம் ஆகும். மேலும் 2026 அரசியல் கள நிலவரத்தைப் பொறுத்தவரை புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் வெற்றியை பாஜக பெரும். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நல்லதொரு நிலை தெரிகிறது. சிறப்பான கூட்டணி அமைத்தால் கணிசமான வெற்றியை பெறுவார்” என்றார்.
இதனை அடுத்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், “ஜோதிடம் குறித்த முறையான புரிதல்கள் ஏற்படுத்த பள்ளி பாடத்திட்டத்தில் ஜோதிடம் குறித்த பாடத்திட்டத்தை தமிழக அரசு இணைக்க வேண்டும். நடிகர்களுக்கு, சமூக சேவையாளர்களுக்கு என பல்வேறு தரப்பினருக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விருதுகள் ஜோதிடத்தில் புலமை வாய்ந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தனிநலவாரியம் அமைத்து தர வேண்டும்”என பேட்டியளித்தனர்.