விஜய் போட்ட உத்தரவு! தலித் வாக்குகளை கவர முடிவு?
அதிமுக -திமுக கட்சிகளுக்கு போட்டியாக தனது மன்ற நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறார் நடிகர் விஜய்.
அதிமுகவிற்கு ஒன்றரை கோடி நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர் என்று கட்சியின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து சொல்லி வந்தார். அவருக்கு அடுத்தபடியாக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் அதையே சொல்லி வருகின்றார்கள். தற்போது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதை அடுத்து இந்த கட்சியினர் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதை அடுத்து ஒன்றரை கோடி உள்ள தொண்டர்களை இரண்டு கோடி உறுப்பினர்களாக மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதை அடுத்து அதிமுகவினரும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகளை தொடங்க உத்தரவிட்டிருக்கிறார் நடிகர் விஜய். ஆன்லைன் மூலமாக இந்த புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன .
அதுமட்டுமல்லாது, அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருக்கிறார் . இதற்காக மாவட்டம் தோறும் நடக்கும் இந்த விழாவில் அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், இதற்காக முன்கூட்டியே காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அரசியல் கனவில் இருக்கும் விஜய், அரசியலுக்கு வரும் முன்பே தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.