சதிகாரர்களிடமிருந்து அதிமுக மீட்கப்பட்டுள்ளது- வெல்லமண்டி நடராஜன்
தர்மம் வெல்லும் என்கிற கருத்துக்கு ஏற்ப தீர்ப்பு வந்துள்ளதாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது, மீண்டும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைந்து பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து திருச்சி கண்டோன்மென்ட், எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணியின் அமைப்பு செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கி மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெல்லமண்டி நடராஜன், “தர்மம் தான் வெல்லும் என்கிற கருத்துக்கு ஏற்ப தீர்ப்பு இன்று வந்துள்ளது. அ.தி.மு.க சதிகாரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று தொண்டர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஜெயக்குமாருக்கு தினமும் விமர்சனம் செய்வது தான் வேலை. அவர் திருச்சியில் 15 நாள் தங்கி இருந்தார். அவர் அப்போது திரைமறைவாக யார் யாரையெல்லாம் சந்தித்தார் என்பதை பேசினால் அது அநாகரிகமாக இருக்கும். அ தி.மு.க தொண்டர்களின் நிலைப்பாடு என்பது ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் என்ன நிலைப்பாடு எடுத்து அறிவிக்கிறார்களோ அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். நல்ல தீர்ப்பு வரும் என தொண்டர்களுக்கு தெரியும் அதனால் தான் இவ்வளவு நாட்கள் அனைவரும் அமைதி காத்தார்கள்” எனக் கூறினார்.