"இலங்கை அமைச்சர் வந்திருக்காரு.. பிரஷர் போடுங்க" - மத்திய அரசுக்கு வாசன் முக்கிய கோரிக்கை!

 
வதந்திகளைப் புறக்கணிப்போம்… கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்போம்… கொரோனாவை ஒழிப்போம்! – ஜி.கே.வாசன் அறிவுரை

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரிடம்,  தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடக்கூடாது என்றும்,   மீன்பிடித்தொழிலுக்கு இலங்கை கடற்படையினரால் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதையும் மத்திய அரசு   அழுத்தத்தோடு தெரிவிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ இந்திய இலங்கை நட்புறவு தொடர வேண்டும் என்ற நோக்கத்தினை இலங்கை அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களிடம் மத்திய அரசு தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து தெளிவுபடத் தெரிவிக்க வேண்டும். பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்துள்ள இலங்கை அமைச்சரிடம் முதலில் நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மேம்பட முக்கியப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

மீனவர்கள்

இந்தியாவினால் இலங்கைக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்படுவதாக தெரிகிறது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் இந்திய நாட்டின் மிக முக்கியப்பிரச்சனையாக இருக்கின்ற தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

தமிழக மீனவர்கள்

குறிப்பாக இலங்கை அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்நிலையில் மத்திய அரசு, இலங்கை அமைச்சரிடம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை நிறுத்த வலியுறுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் அத்துமீறிய நடவடிக்கைகள், அராஜகங்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமிழக மீனவர்களும், படகுகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு

மிக முக்கியமாக இந்தியா, இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவதோடு நட்புறவு தொடர்வதற்கும், இலங்கை அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடாமல் தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்கும், தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாக்கப்படுவதற்கும் ஏதுவாக பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசை த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.