“பாமக இரு பிரிவாக உள்ளது, ஆனால் உடையவில்லை... வன்னியர் சங்கத்தில் பிரச்சனை இல்லை”- அருள்மொழி

 
ச் ச்

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் நியமிக்கும் பொறுப்பாளர்கள் தான் செல்லும், நிர்வாகிகளை நியமனம் செய்யும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே இருப்பதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் போக்கு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியே தங்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கிவருகிறார். 

இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனரால் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வன்னியர் சங்க தலைவர் பு தா. அருள்மொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமக இரு பிரிவாக உள்ளது, உடையவில்லை.மருத்துவர் ராமதாஸ் நிர்வாகிகள் நியமனத்தில் அவர் போடும் பொறுப்புகள் தான் செல்லும். பாமகவில் கடைசி வரை ராமதாஸ் தான் தலைவராக இருப்பார், திமுகவில் கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்தார், அது போல ராமதாசும் இருப்பார். கட்சியின் பொது செயலாளர் வடிவேலு ராவணன் அன்புமணி பக்கம் சென்றுவிட்டதால் அந்த பதவிக்கு ஒருவரை நியமிக்க தான் வேண்டும், பாமக இரு பிரிவாக இருப்பது தேர்தலில் பலவீனப்படுத்தாதது. பாமக கட்சியில் தான் பிரச்சனை உள்ளது, வன்னியர் சங்கத்தில் பிரச்சனை இல்லை.பாமக நிறுவனர் ராமதாஸ் நியமிப்பவர்கள் பொறுப்பாளர்கள் தான் செல்லும், ராமதாசுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்யும் அதிகாரம் இருக்கிறது” என்றார்.