பாஜக இன்றி தமிழ்நாட்டில் அரசியல் இல்லை - வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

பாஜக இல்லாமல் இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசியல் முடிவுகள், நிகழ்வுகள் நடக்காது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ., மகளிர் அணி சார்பில், சென்னையில் நடந்த சுஷ்மா  சுவராஜ் விருது வழங்கும் மகளிர் தின விழாவில் தேசிய மகளிர்  அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “பாஜக இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் முடிவுகள், அரசியல் நிகழ்வுகள் நடக்காது. பொறுப்பையும், பொறுமையையும் சரியான விகிதத்தில் கலந்து, நாம் அரசியல் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வெண்டும். தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்கின்றன அவலமான காலகட்டத்தில் தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றுபவர்களை வடநாட்டவர்தான். அவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்ய வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை.

அண்ணாமலையின் தைரியமான பேச்சும், வேகமான செயலும் என்னை எப்போதும் ஈர்க்கக்கூடியவை. கருணாநிதி, ஜெயலலிதா போல தானும் ஒரு தலைவர் என கூறியது, கட்சியில் தலைமை பொறுப்பு குறித்தே அண்ணாமலை பேசினார். தலைமை பண்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் பேசியதை திரித்து அவர்களின் பர்சனாலிட்டியுடன் ஒப்பிடுவது தவறு. சொந்த குடும்பத்தை பார்த்தே மு.க.ஸ்டாலினுக்கு பயம், திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. பிரச்னை என்றால் அதனை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும். பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை
” என்றார்.