வலுக்கும் நேரு - அன்பில் மகேஷ் மோதல் : திகுதிகு திருச்சி திமுக
ஆரம்பத்தில் இருந்து திருச்சி திமுகவில் மிகுந்த செல்வாக்கோடு இருந்து வருகிறார் கே. என். நேரு . அடுத்ததாக திருச்சி சிவா எம். பி. செல்வாக்குடன் வலம் வந்து வருகிறார். இதனால் திருச்சி திமுகவில் இரண்டு கோஷ்டிகள் செயல்பட்டு வந்தன.
ஒரு கட்டத்திற்கு மேல் உதயநிதி நண்பர் என்று அன்பில் மகேஷ் வளர்ந்து வந்ததால் திருச்சி திமுகவில் நேரு- சிவா - மகேஷ் என்று மூன்று கோஷ்டிகளாக திமுக பிரிந்து செயல்பட தொடங்கின . இவர்கள் மூன்று பேருக்கும் இடையே இருந்திருக்கும் போட்டியில், திருச்சியில் தான் மட்டுமே முன்னிலையில் இருக்க வேண்டும் யாரும் வளரக்கூடாது என்ற நிலையில் நேரு இருப்பதாக மகேஷ், சிவா ஆதரவாளர்கள் அடிக்கடி குற்றம் சாட்சி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் சிவா எம் பி யின் பெயரை போடாததாலும், அவருக்கு அழைப்பு விடுக்காததாலும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சனையை கிளப்ப, பின்னர் நேரு ஆதரவாளர்கள் அவர்களை அடித்து தாக்க சிவா -நேரு ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலால், என் தூக்கத்தை ஏன் கெடுக்கிறீர்கள்? என்று முதல்வர் ஆவேசப்படும் அளவிற்கு விவகாரம் சென்ற பின்னர், அந்த விவகாரத்தில் சிவாவை நேரில் சென்று சந்தித்து சமாதானப்படுத்தினார் நேரு.
அதன் பின்னர் மகேஷ் ஆதரவாளர்களுக்கும் நேரு ஆதரவாளர்களுக்கு இடையேயான போட்டி வலுத்து வருகிறது . அடுத்த தலைமுறையாக மகேஷ்இருப்பதால், திருச்சியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். உதயநிதி நண்பரான அவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடி உதயநிதி வரும் போது உதயநிதிக்கு மிக நெருக்கமாக மகேஸ் இருப்பார் என்கிற கணக்கில் திமுகவினர் பலரும் மகேஷின் பக்கம் சாய்கிறார்கள்.
நேருவின் தயவால் சீட் வாங்கி எம்எல்ஏக்கள் ஆனவர்கள் பலரும் கூட மகேஷ் பக்கம் சாய்ந்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் கொண்ட நேரு தனக்கு எதிராக உள்ள எம்எல்ஏக்கள் யாரையும் அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை என்று ஆத்திரத்தில் இருக்கிறார். அதே மாதிரி அவர்கள் பங்கேற்கும் விழாக்களையும் புறக்கணிக்கும்படி தனது ஆதரவாளர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படியே திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தை நேற்று திறந்து வைத்தார் அமைச்சர் நேரு. இதில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். ஆனால் அமைச்சர் மகேஷ் அவரது ஆதரவு எம். எல். ஏ இனிக்கோ இருதயராஜ் யாரும் பங்கேற்கவில்லை . அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை . நேரு -சிவா ஆதரவாளர்கள் மோதல் வலுத்து தற்போது கொஞ்சம் அமைதியாக இருக்கும் நிலையில் , நேரு-மகேஸ் ஆதரவாளர்கள் இடையே வலுக்கும் இந்த மோதலால் திருச்சி திமுக திகுதிகுவென்று இருக்கிறது.