சி.வி.சண்முகம் சட்டம் படித்தவர், ஆனால் நீதிமன்றத்திற்கு செல்லாத வக்கீல் - வைத்திலிங்கம்
பதவி வெறியின் காரணமாக விதிக்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட அவைத்தலைவர் உள்ளிட்ட எந்த தீர்மானங்களும் செல்லுபடியாகாது என ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் அவை தலைவர் நியமனம், 23 தீர்மானங்கள் நிராகரிப்பு உள்ளிட்ட பல குழப்பங்களுடன் இன்று அரங்கேறியது. கூட்டம் நிறைவில் மீண்டும் பொதுக்குழு ஜூன் 11ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகாக ஓபிஎஸ் தனது இல்லத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து திடீர் பயணமாக டெல்லி விரைகிறார் என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “நீதிமன்றத்தின் உத்தரவுபடி தான் பொதுக்குழு நடைபெற்றது. 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவை தலைவர் தீர்மானத்தை நிறைவேற்றியதும், 23 தீர்மானங்களையும் ரத்து என்று கூறியதும் நீதி மன்ற அவமதிப்பு செயல். பொதுக்குழு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்படாமல், பதவிவெறியின் காரணத்தால் விதிக்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானங்களும் செல்லுபடியாகாது என்பது தான் எங்கள் கருத்து.
சி.வி.சண்முகம் சட்டம் படித்தவர், ஆனால் நீதிமன்றத்திற்கு செல்லாத வக்கீல். அவர் ஒரு பெரிய வக்கீல் என்று சொல்லமுடியாது” எனக் கூறினார்.