பானாஜி தொகுதியில் நல்ல வேட்பாளரை பா.ஜ.க. நிறுத்தினால் தேர்தலில் இருந்து விலகத் தயார்.. உத்பால் பாரிக்கர்

 
உத்பால் பாரிக்கர்

கோவாவில், பானாஜி தொகுதியில் நல்ல வேட்பாளரை பா.ஜ.க. நிறுத்தினால் தேர்தலில்இருந்து விலகத் தயார் என்று மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க. அண்மையில் 34 பேர் கொண்ட தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பானாஜி சட்டப்பேரவை தொகுதியில் அதனாசியோ பாபுஷ் மான்செரேட் என்ற நபரை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. 

பா.ஜ.க.

அதேசமயம், வேறு 2 தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுமாறு உத்பால் பாரிக்கரிடம் பா.ஜ.க. தலைமை கூறியது. ஆனால் அதனை உத்பால் பாரிக்கர் மறுத்து விட்டார். இதற்கு மத்தியில், பா.ஜ.க.விலிருந்து வெளியேறி ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுங்க என்று உத்பால் பாரிக்கருக்கு அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். இதனால் உத்பால் பாரிக்கர் ஆம் ஆத்மி வேட்பாளராக பானாஜி தொகுதியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆம் ஆத்மி

எதிர்பார்த்தது போலவே நேற்று முன்தினம் உத்பால் பாரிக்கர் பா.ஜ.க.விலிருந்து வெளியேறினார். ஆனால் பானாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக உத்பால் பாரிக்கர் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், பானாஜி தொகுதியில் பா.ஜ.க. நல்ல வேட்பாளரை நிறுத்தினால், தேர்தலில்இருந்து விலகத் தயார் என அறிவித்துள்ளார். ஆனால் பா.ஜ.க. வேட்பாளரை மாற்றுமா என்பது சந்தேகம்தான்.