வன்முறை சம்பவ குற்றவாளிகளுக்கு பஞ்சாப் அரசு ரூ.2 லட்சம் அறிவித்தது துரதிர்ஷ்டவசமானது.. மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

 
சோம் பிரகாஷ்

வன்முறை சம்பவ குற்றவாளிகளுக்கு பஞ்சாப் அரசு ரூ.2 லட்சம் அறிவித்தது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் கடந்த ஜனவரி 26ம் தேதியன்று நடந்த டிராக்டர் பேரணி போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அண்மையில் பஞ்சாப் அரசு அறிவித்தது. இதனை, வன்முறை சம்பவ குற்றவாளிகளுக்கு பஞ்சாய் அரசு ரூ.2 லட்சம் வழங்குவது துரதிருஷ்டவசமானது என்று  மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் விமர்சனம் செய்துள்ளார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் கூறியதாவது: 2017ல் மக்களுக்கு வேலை தருவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால் யாருக்கும் வேலை தரவில்லை. 

சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் அரசு பொய்யான முழக்கங்களையும், வாக்குறுதிகளையும் வழங்குவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சமீபகாலமாக பல்வேறு விவகாரங்களில் தனது சொந்த அரசாங்கத்தை குறிவைத்து வருகிறார்.  முதல் முறையாக, முதல்வர் (சரண்ஜித் சிங் சன்னி) எதையாவது சொல்வதையும், கட்சி தலைவர் (நவ்ஜோத் சிங் சித்து) இன்னொன்றையும் கூறுவதையும், முதல்வரின் முடிவுகளை சித்து லாலிபாப் என்று கூறுவதையும் நாம் பார்த்தோம். இது காங்கிரஸ் எப்படி தோல்வி அடைகிறது என்பதை காட்டுகிறது. 

நவ்ஜோத் சிங் சித்து

கடந்த ஜனவரி 26ம் தேதியன்று டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ரூ.2 லட்சம் அறிவித்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை. தேச துரோக வழக்குகள் உள்ளன, பஞ்சாப் அரசு அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்குகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.