ஹைதராபாத் பெயரை மாற்றுவதற்கு எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.. மத்திய பா.ஜ.க. அமைச்சர்

 
ஹைதராபாத்

ஹைதராபாத் பெயரை மாற்ற எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது என்று மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராவ் சாகேப் தன்வே தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகர் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர். தற்போது ஹைதராபாத் பெயரை மாற்ற வேண்டும் என்று குரல் ஒங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஹைதராபாத்தை மறுபெயரிட எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ராவ் சாகேப் தன்வே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நமது நாட்டுக்கு படையெடுத்த வெளிநாட்டினர் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி பழைய பெயர்களை (பல்வேறு இடங்களின்) மாற்றியதாக உணர்கிறேன். சுதந்திர இந்தியாவில், நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பெயர்களை மீண்டும்  மாற்றினால், அதை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது  என்று நினைக்கிறேன்.

ராவ் சாகேப் தன்வே

மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே மகாராஷ்டிராவின் ஜல்னா மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.