ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய மத்திய பா.ஜ.க அமைச்சர்

 
வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குணமடைய கால அவகாசம் தேவை என்றால், ஷிண்டேவிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முதுகுத்தண்டு பிரச்சினை காரணமாக கடந்த  நவம்பர் 10ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்கு அடுத்த இரண்டாவது நாளில் அவருக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தவ் தாக்கரே கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று வீடு திரும்பினார்.

ராவ் சாகேப் தன்வே

மருத்துவர்கள் ஒய்வெடுக்க அறிவுறுத்தியதால், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் (கடந்த டிசம்பர் 22-28) முதல்வர் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை. இந்த சூழ்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைய நேரம் எடுத்து கொண்டால், மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பை சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே வழங்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே நேற்று புதிதாக தொடங்கப்பட்ட ஜல்னா-புனே ரயில் சேவையில் பயணம் செய்த பிறகு, அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைய நேரம் எடுத்து கொண்டால், மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பை சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே வழங்க வேண்டும். ஷிண்டே ஒரு திறமையான அமைச்சர். சிவ சேனாவில் பிரச்சினையை உருவாக்க நான் முயற்சிக்கவில்லை. உத்தவ் தாக்கரே குணமடைய கால அவகாசம் தேவை என்றால், ஷிண்டேவிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.