தெலங்கானா அரசால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை... முதல்வர் சந்திரசேகர் ராவை தாக்கிய பா.ஜ.க.

 
கே.சந்திரசேகர் ராவ்

தெலங்கானா அரசால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டினார்.

நிதி ஆயோக் நிர்வாகக் கவுன்சிலின் ஏழாவது கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் கலந்து கொள்ளவில்லை. கடந்த சனிக்கிழமையன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சந்திரசேகர் ராவ் அறிவித்தார். மேலும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நிதி ஆயோக்கின் 7வது நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த பயனும் இல்லை. 

மோடி

இந்தியாவை வலிமையான மற்றும் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான நமது கூட்டு முயற்சியில் மாநிலங்களை பாரபட்சமாக நடத்தும் மத்திய அரசின் தற்போதைய போக்கிற்கும், அவர்களை சம பங்காளிகளாக கருதாததற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிலிருந்து விலகி இருக்கிறேன் என தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி மீதான தெலங்கானா முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

கிஷன் ரெட்டி

மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கூறுகையில், கே.சந்திரசேகர் ராவ் அரசால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மாநிலத்தில் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. வரும் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வியடையும், அவர்கள் பயப்படுகிறார்கள். அவர் கவலைப்பட்டார், தனது மகனை முதல்வராக்க விரும்பினார். இதனால் பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார் என தெரிவித்தார்.