வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்.. மத்திய அமைச்சர் தோமர் சூசகம்

 
‘விவசாயிகள் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம்’ – மத்திய அமைச்சர் தோமர்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வரும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மறைமுகமாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த அக்ரோ விஷன் கண்காட்சியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில் கூறியதாவது:  விவசாய திருத்த சட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் சிலருக்கு இந்த சட்டங்கள் பிடிக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு கொண்டு வந்த ஒரு பெரிய சீர்திருத்தம் இது.

வயலுக்கு உரமிடும் விவசாயி

ஆனால் (விவசாயிகளின் எதிர்ப்பால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது) அரசு ஏமாற்றம் அடையவில்லை. ஒரு படி பின்வாங்கினோம். முன்னோக்கி செல்வோம். ஏனென்றால் விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு, முதுகெலும்பு வலுவாக இருந்தால்தான் நாடும் வலுவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதாவது வேளாண் சீர்த்திருத்தங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் மறைமுகமாக கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் பல எல்லைகளில் கடந்த ஒராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. மேலும் பல விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை முடித்து கொண்டு வீடுகளுக்கு திரும்பினர்.