திமுக இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் தலை வைத்து படுக்க முடியாது- உதயநிதி ஸ்டாலின்

 
udhayanidhi stalin

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆட்சி திமுக ஆட்சி, திமுக இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் தலை வைத்து படுக்க முடியாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

Udhayanidhi Stalin's Cabinet entry decided?- The New Indian Express

சிதம்பரம் நகர்மன்றத் தேர்தலில் 33 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிதம்பரம் தெற்கு வீதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாத காலத்தில் 10 கோடி தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. அதனால்தான் மூன்றாவது அலை ஏற்பட்டபோதும் பெரிய அளவில் உயிரிழப்புக்கள் இல்லை. சிதம்பரம் நகரில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. தற்போதுள்ள எழுச்சி அடுத்த 9 நாட்களும் இருக்க வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்களிடம் நல்ல எழுச்சியை காணமுடிகிறது. தாய்மார்கள் முடிவு செய்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது.'

8 மாதத்திற்கு முன்பு திமுக அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்தில் கொரோனா தாண்டவமாடியது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லை. ஆக்சிஜன் இல்லை. மருந்துகள் இல்லை என்ற நிலையில் ஆட்சி பொறுப்பேற்று கடுமையாகப் போராடி இரண்டே மாதத்தில் கொரோனா கட்டுபடுத்தப்பட்டது. கொரோனா வார்டுக்குள்ளேயே சென்று  ஆய்வு செய்த ஒரே முதல்வர் இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் மு க ஸ்டாலின்தான். நேற்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பற்றி பேசியிருக்கிறார். தேர்தல் வந்தால் உதயநிதி ஸ்டாலின் வருவார்.வாக்குறுதிகளை அள்ளிக் கொடுப்பார். பின்னர் காணாமல் போய்விடுவார் என்று. அவர் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். என்னை எனது வீட்டில் கூட தேட மாட்டார்கள். ஆனால் எடப்பாடி தேடுகிறார். என் மீது அவருக்கு அவ்வளவு அக்கறை. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் அளித்தவர் முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கு இலவச பஸ் வசதி, பெட்ரோல் விலை ரூ 3 ரூபாய், ஆவின் பால் விலை ரூ 3 குறைப்பு போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் ஸ்டாலின்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 50 லட்சம் லட்சம் பேர் பயனடைந்தார்கள். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர். நம்மை காப்போம் 48 திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கி ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று கூறினார்கள். ஆனால் கோயில்களுக்கு அதிக அளவில் கும்பாபிஷேகம் செய்ததும், அர்ச்சகர்களுக்கு நிதி உதவி அளித்ததும் திமுக ஆட்சியில்தான்” எனக் கூறினார்.