சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் - உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று நான்காம் ஆண்டு நிறைவு விழா, மணப்பாறையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி அறிவித்தல் விழா, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, மணப்பாறை ஒன்றிய திமுக அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் அகில இந்திய அளவிலான கபடி போட்டி விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் மணப்பாறை அருகே உள்ள தியாகேசர் ஆலை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியும், கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகள் 450 பேருக்கு பொற்கிழிகளையும் வழங்கியும் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கழகச் செயலாளர் கே.என். நேரு, துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, மெய்ய நாதன் ஆகியோரும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., “நான் தந்தை பெரியார், அண்ணாவை பார்த்தது இல்லை, ஆனால் பொற்கிழி வழங்கும் போது உங்களை பெரியாராக, அண்ணாவாக பார்க்கிறேன். திமுகவின் வெற்றிக்கு முதல் காரணம் மக்களாகிய நீங்கள் தான். ராசி மீது எனக்கு நம்பிக்கை இல்லை, மழையோடு வரவில்லை, உங்களை பார்க்க அன்போடு வந்திருக்கிறேன். தமிழக முதல்வராக வெற்றி பெற்றதுக்கு உங்களின் உழைப்பே காரணம். அமைச்சர்களின் போட்டி போட்டு வேலை செய்ததால் தான் தமிழகம் வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் இது தான் திராவிட மாடல் ஆட்சி” என்றார்.