ஓபிஎஸ் திமுகவின் B டீமா? - உதயநிதி ஸ்டாலின்
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் தேசிய மாடலாக மாறுமா என்பதற்கு நான் கருத்து சொல்ல முடியாது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் B டீமா செயல்படுகிறார் எனக் கூறுகின்றனர். திமுகவில் A டீம், B டீம் என எந்த டீமும் இல்லை,ஒரே டீம் தான் உள்ளது, அது தலைவர் முக ஸ்டாலின் டீம் மட்டுமே” எனக் கூறினார்.
பேட்டிக்காக மேஜையில் அனைத்து தொலைக்காட்சி மைக்களும் வைத்திருந்த நிலையில் எழுந்து நின்றே பேட்டி கொடுக்கிறேன் என்று கூறிய உதயநிதி நியூஸ் ஜே தொலைக்காட்சியின் மைக்கை கையில் எடுத்து வைத்துக்கொண்டே பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.