தவெகவில் பதவிக்கு ரூ.5 லட்சம் வசூல்?

திருவள்ளூர் தவெக தெற்கு மாவட்டத்தில் கட்சியில் பதவிகளை நியமிப்பதற்கு 5 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடத்தி முடித்தார். மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
நிர்வாக வசதிக்காக த.வெ.க. 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆறாவது கட்டமாக 19 கழக மாவட்டங்கள் பொறுப்பாளர்களை பட்டியலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய தினம் வெளியிட்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் பிரகாசம் என்கின்ற குட்டி என்பவர் மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கு 5 லட்சம், மாவட்ட பொருளாளர் பதவிக்கு 3 லட்சம், மாவட்ட துணைச் செயலாளர் பதவிக்கு 2 லட்சம் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 80 ஆயிரம் ரூபாய் கேட்டு கரராக வசூலிப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய பணத்தை அவருடன் இருக்கும் நவீன் குமார் என்பவரை வைத்து வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பதவிக்கு பணம் கேட்டது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிக்கு செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்க 80 ஆயிரம் ரூபாய் பேசி அதில் ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 40 ஆயிரம் பணம் எப்போது வழங்க வேண்டும் என அவர் பேசும் ஆடியோவும், இதே போல் திருவள்ளூர் பகுதியில் வினோத் என்கின்ற நிர்வாகிக்கு பதவி கொடுக்க பணம் கேட்டு தர மறுத்ததால் அவரை மிரட்டியதாக அவருடைய தாய் தவெக மாவட்ட மகளிர் அணியினருக்கு போன் செய்து மாவட்ட நிர்வாகி குட்டியை திட்டி வசைபாடும் ஆடியோவும் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சியில் பொறுப்புகள் நியமிப்பதற்கு யாரிடமும் பணம் பெறக்கூடாது கட்சி நிர்வாகிகளை எச்சரித்துள்ள நிலையில், எச்சரிக்கை மீறி கட்சி பதவிக்கு பணம் பெறுவதாக ஆடியோ வெளியாகி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்ற குட்டியிடம் விளக்கம் கேட்டதற்கு, தனக்கு கட்சியில் விரோதமாக உள்ளவர்கள் தான் மாவட்ட செயலாளர் பதவி வாங்கி விடக்கூடாது என்பதற்காக இத்தகைய ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும், அது போன்று தான் கட்சிக்கு பொறுப்பு அளிப்பதற்காக யாரிடமும் பணம் கேட்கவில்லை என்றும் தன் மீது அவதூறு பரப்பி ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பது குறித்து கட்சி உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்