உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் நகைச்சுவையாக உள்ளது- டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கொடி ஏற்றி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியாக இருந்துகொண்டும் அதிமுகவால் ஈரோட்டில் வெற்றி பெறமுடியவில்லை. டெபாசிட் கூட அவர்கள் இழந்திருக்கக்கூடும். அதிமுக ஒரு வட்டாரக் கட்சியாக முழுமையாக மாறிவிட்டது. அதிமுகவில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலை தற்போது உள்ளது. இரட்டை இலை சின்னமும் அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான்.
அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளார்கள். புதியதாக அரசியலுக்கு வந்த இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இன்னும் இது தான் அம்மாவின் உண்மையான இயக்கம் என்று உணர்ந்து இருக்கிறார்கள். 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் திமுக அரசு பெற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் நகைச்சுவையாக உள்ளது" என விமர்சித்தார்.