மாணவர்களுக்கு வழங்கும் சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டியா?? டிடிவி தினகரன் கடும் கண்டனம்..

 
TTV Dhinakaran

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பி.இ., எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் 18% ஜி.எஸ்.டி கட்டினால் மட்டுமே அனைத்து வகையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதலே அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டிடிவி தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழக அரசு முறைப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாணவர் சான்றிதழ்களுக்கான கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என்று குறிப்பிட்டுள்ளார்.