அதை பேசவேண்டாம் என என்னிடம் ஏன் சொன்னீங்க? பதில் சொல்லுங்க? - கனிமொழிக்கு திருச்சி சூர்யா கேள்வி
இந்திய குடிமைப் பணி குரூப்- 1 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடன் சென்னை ராஜ் பவனில் உள்ள தர்பார் அரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் குறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த ஆளுநர், வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை தனிநபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாக பெறுகிறது . அது ஒரு முறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ச்சியாக அத்தகைய நன்கொடைகளை வரும் என்றால் அங்கு வெளிநாடு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும் . இந்த சட்டம் மூலமாக அனைத்து வெளிநாட்டு நண்பர்களும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும் .
இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள், சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டு இருக்கிறது. தென் தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டத்திற்கான வேலையை தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்றத் தாக்கம் ,அணு உலை வெடிக்கலாம் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடிக்கின்றன . யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் சிலருக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து எல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரிய வந்தது.
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் அந்நியர் நிதி பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெற்றது தெரிய வந்திருக்கிறது. துரதிஷ்டவசமாக ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்களின் உயிர் பலியானது தான் கவலைக்குரிய விஷயம். இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை தாமிரம். இந்த வேலையை முடக்கும் வகையில் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியை பெற்று வந்தது தெரிய வந்திருக்கிறது. இத்தகைய நிதி உதவிகளை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அது தற்போது முடியவில்லை ஆனால் போகப் போக அது சரியாகிவிடும் என்றார்.
ஆளுநரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி எம்பி கனிமொழி , இதற்கான ஆதாரங்களை ஆளுநர் தர வேண்டும். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன் என்று ஸ்டெர்லைட் தொடர்பான ஆளுநர் பேச்சுக்கு கனிமொழி எம்பி கடும் கட்டணம் தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுகவிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து அக்கட்சியிலிருந்தும் தற்போது வெளியேறி விட்டாலும் பாஜகவுக்கு குரல் கொடுத்து திருச்சி சூர்யா சிவா, ஆட்சியை கையில் வைத்திருக்கும் நீங்கள், ஆளுநர் ஏன் ஆதாரங்கள் தர வேண்டும். தங்களுக்காக திமுகவில் அப்பொழுது பயணித்த நான், பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்காக பிரச்சாரம் செய்தபோது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் துப்பாக்கிச் சூட்டை பற்றி மட்டும் எந்த இடத்திலும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று தாங்கள் எனக்கு கட்டளையிட்டதற்கான காரணம் என்ன? நீங்களும் அந்த கம்பெனியில் இருந்து பணம் வாங்கினீர்களா? அதிமுகவின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏன் பரப்புரையில் கூற வேண்டாம் என்று கூறினீர்கள்? அதற்கு உண்டான பதிலை கூறவும் என்று கேட்கிறார்.